பகிடிவதைகள் தொடர்பான விசாரணை CID-யிடம் ஒப்படைப்பு

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு

by Bella Dalima 10-11-2022 | 5:03 PM

Colombo (News 1st) பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெறும் மற்றும் தற்போது கிடைத்துள்ள முறைப்பாடுகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் , சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகளையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கடந்த சில தினங்களாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

களனி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட மாணவர் ஒருவரை, மாணவர் சங்கத்தை சேர்ந்த சிலர் தாக்கி, பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிடிவதைக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் ஆறு மாணவர்களை விடுதிக்குள் தடுத்து வைத்து ஏனைய சில மாணவர்கள் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியதாக களனி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரின் அந்தரங்க நிழற்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.