.webp)
Colombo (News 1st) அம்பாறை - தம்பிலுவில் தேசிய பாடசாலையில் நேற்று மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் மற்றுமொரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று நடைபெற்றது.
அம்பாறை - தம்பிலுவில் தேசிய பாடசாலையில் இரண்டு மாணவர்கள் இடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
வகுப்பறையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, மற்றுமொரு மாணவருடன் ஏற்பட்ட மோதலில் குறித்த மாணவர் எதிர்பாராத விதமாக கீழே வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, அந்த மாணவர் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
தரம் 8 இல் கல்வி பயின்ற 13 வயதான தம்பிலுவில் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரே மோதலில் உயிரிழந்தார்.
மோதலுடன் தொடர்புடைய மற்றைய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்நிலையில், சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று அம்பாறை பொது வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதன்போது, திறந்த தீர்ப்பின் அடிப்படையில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அம்பாறை தம்பிலுவில் தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மஹஜரை அவரிடம் கையளித்திருந்தனர்.
எனினும், பாடசாலைக்கு முன்பாக கொட்டில் அமைத்து தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.