.webp)
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பான வழக்கின் வியடங்களை பகிரங்கப்படுத்துவதற்கு சிட்னி நீதவான் இன்று ஊடகங்களுக்கு அனுமதி வழங்கினார்.
ஊடக நிறுவனங்கள் சில முன்வைத்த மேன்முறையீட்டினை ஆராய்ந்த நீதவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
வௌிப்படுத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்த தகவல்களை, நீதிமன்ற அனுமதியை அடுத்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் வௌிப்படுத்தியுள்ளன.
அந்த செய்திகளுக்கு அமைய, தனுஷ்க குணதிலக்க குறித்த பெண்ணை சந்தித்து சிட்னியிலுள்ள ஒப்பேரா உணவகத்தில் மதுபானம் அருந்தியுள்ளதுடன், பின்னர் இருவரும் படகு சவாரி செய்துள்ளனர்.
தொடர்ந்து இருவரும் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளதுடன், இதன்போது தனுஷ்க குணதிலக்க அவருடன் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்டு, பின்னர் அவரது கழுத்தை சுற்றி கையைப்போட்டு சுமார் 30 விநாடிகள் இறுக்கிப் பிடித்ததாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அப்பெண்ணின் கழுத்து இரண்டு தடவைகள் தனுஷ்கவின் பிடியில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது தடவையாகவும் கழுத்தை தனுஷ்க குணதிலக்க இறுக்கியபோது, அந்த பெண் அதிலிருந்து விடுபடுவதற்கு முயற்சித்துள்ளதுடன், இதன்போது தனுஷ்க அவரது கழுத்தை மேலும் இறுக்கியுள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டதாகவும் இயற்கைக்கு முரணான வகையில் செயற்பட்டதாகவும் அப்பெண் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண் தனது இரண்டு தோழிகளுக்கு கூறியுள்ளதுடன், பின்னர் உளநல நிபுணரையும் வைத்தியரையும் சந்தித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதன் பின்னரே அவுஸ்திரேலிய பொலிஸார் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரது மூளைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை தனுஷ்க குணதிலக்க சார்பில் அவுஸ்திரேலியாவின் மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவரது பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இந்த வழக்கு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.