COP-27 மாநாட்டில் இலங்கை சார்பில் மாலைத்தீவு சபாநாயகர் கலந்துகொண்டது ஏன்: எதிர்க்கட்சி கேள்வி

by Bella Dalima 08-11-2022 | 8:19 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் COP-27  மாநாட்டில் கலந்துகொண்டுள்ளமை தொடர்பில்  விவாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  நளின்  பண்டார இன்று  சபையில் கேள்வி எழுப்பினார். 

COP-27 மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாலைத்தீவின் சபாநாயகர் பங்கேற்றுள்ளார்.  ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, மாநாட்டில்  கலந்துகொள்ள தகுதியான வேறு எவரும் இல்லையா என  நளின் பண்டார வினவினார். 

சர்வதேச ரீதியில் இலங்கையை குறைத்து மதிப்பிடும் வகையில், மாலைத்தீவின் சபாநாயகர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதாக நளின் பண்டார குறிப்பிட்டார். 

2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை மொஹமட் நஷீட்  மாலைத்தீவுகளின் ஜனாதிபதியாக இருந்தார். அவர் தற்போது அந்நாட்டு பாராளுமன்றத்தில் சபாநாயகராக பதவி வகிக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது சர்வதேச காலநிலை ஆலோசகராக மொஹமட் நஷீட்டை கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நியமித்தார்.

 மாலைத்தீவுகள் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் கடந்த 4 ஆம் திகதி ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில், 
மொஹமட் நஷீட் இலங்கை அரசாங்கத்தின் தேசிய பிரதநிதிகள் குழுவின் உறுப்பினராக COP-27 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அவரது இந்த பயணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சபாநாயகர் மொஹமட் நஷீட் மக்களின் பணத்தை பயன்படுத்தி  வேறு ஒரு நாட்டை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என முன்னாள் சட்டமா அதிபர் கலாநிதி மொஹமட் முனாபர் கேள்வி எழுப்பியுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

அவர் மாலைத்தீவுகள் அரசு மீது கொண்டுள்ள சார்புத்தன்மை என்னவெனவும்  மாலைத்தீவுகளின் முன்னாள் சட்டமா அதிபர் வினவியுள்ளார்.

எவ்வாறாயினும், அவர் வேறு ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் எவ்வித தடையும் இல்லை என மாலைத்தீவுகளின் அரசியலமைப்பிலுள்ள இரண்டு சரத்துகளை மேற்கோள்காட்டி மொஹமட் நஷீட்டின் அரசாங்கத்தில் சட்டமா அதிபராக கடமையாற்றிய தியானா சயீட் தெரிவித்துள்ளார்.

மொஹமட் நஷீட் வேறு ஒரு நாட்டை பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம் சார்புத்தன்மை தொடர்பிலான முரண்பாடு உருவாவதாக முன்னாள் உதவி பொலிஸ் ஆணையாளர் அப்துல்லாஹ் பைரூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம், மொஹமட் நஷீட் பாராளுமன்றத்திற்குள் வேறு ஒரு நாடு அல்லது அணிக்கு சார்பாக செயற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காலநிலை அபாயம் நிலவும் நாடுகள் தொடர்பில் செயற்படுகின்ற CVF நிதியத்தின் ஊடாக மொஹமட் நஷீட்டின் செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அந்நாட்டு பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸ குடும்பத்திற்காக மாலைத்தீவுகளில் இந்திய பிரஜை ஒருவருக்கு சொந்தமான 12 மில்லியன் டொலர் பெறுமதியான மாளிகை ,மூன்று மில்லியன் டொலர் பெறுமதியான சிறு மாளிகையொன்றையும் விற்பனை செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபட்டதாக மாலைத்தீவுகளின் பத்திரிகையொன்று கடந்த மே மாதம் 24 ஆம் திகதி செய்தி வௌியிட்டிருந்தது.

இந்த கொடுக்கல் வாங்கலில் மொஹமட் நஷீட் தலையீடு செய்திருந்ததாக The Maldives Journal கூறியிருந்தது.

இலங்கைக்கான சர்வதேச உதவிகளுக்கான இணைப்பு பொறுப்பிற்காக மொஹமட் நஷீட் தற்போது தன்னார்வமாக முன்வந்துள்ளார்.

இலங்கைக்கு வந்திருந்தபோது அவர் ராஜபக்ஸ குடும்பத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இத்தகைய தகவல்கள் வௌியானதன் பின்புலத்திலேயே, கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவுகளின் ஊடாக நாட்டிலிருந்து வௌியேறுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தன.

கோட்டாபய ராஜபக்ஸ நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதையும் முதற்தடவையாக மொஹமட் நஷீட் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரது ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டியே அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

இவ்வாறான பின்புலத்தைக் கொண்டுள்ள மாலைத்தீவுகளின் சபாநாயகர் மொஹமட் நஷீட், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச ஆலோசகராக COP-27 மாநாட்டில் தற்போது கலந்துகொண்டுள்ளார்.

ஏனைய செய்திகள்