துபாயில் 35 மாடி கட்டடம் தீக்கிரை

துபாயில் புர்ஜ் கலிபா அருகிலிருந்த 35 மாடி கட்டடம் தீக்கிரை

by Bella Dalima 08-11-2022 | 3:59 PM

Dubai: துபாயில் 35 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Boulevard Walk எனும் குறித்த கட்டடம் உலகின் உயரமான புர்ஜ் கலிபா (Burj Khalifa) கட்டடத்தின் அருகே உள்ளது.

இந்த கட்டடத்தின் குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக மேல் நோக்கி பரவியது. இதனால் கட்டடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. 

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. 

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டடம் கடுமையாக சேதமடைந்துள்ளது. 

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

துபாயில் உயரமான கட்டடங்களில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. இதற்கு கட்டுமான பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு புர்ஜ் கலிபா அருகே ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளில் தீவிபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது தீ விபத்து ஏற்பட்ட 35 மாடி கட்டடத்தின் உரிமையாளரான Emaar Properties நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.