ஹரக் கட்டாவின் உதவியாளரால் கடத்தப்பட்ட ஹெரோயின்

தெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் ஹரக் கட்டாவின் உதவியாளரால் நாட்டிற்கு கடத்தப்பட்டமை அம்பலம்

by Staff Writer 08-11-2022 | 8:30 AM

Colombo (News 1st) தெற்கு கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஹரக் கட்டாவின் பிரதான உதவியாளர் ஒருவரால் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதற்கமைய, துபாயிலிருந்து ரன்மல்லி என்பவரினால் குறித்த ஹெரோயின் தொகை கடத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெற்கு கடற்பிராந்தியத்தில் 331 கிலோ 110 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் 10 பேர் 02 மீனவப் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 11ஆம் திகதி தெவிநுவர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்ற கவிந்து புத்தா எனும் நீண்ட நாள் மீன்பிடி படகிலிருந்த 06 மீனவர்களும் குறித்த படகை கரைக்கு கொண்டுவர தயாராகவிருந்த டிங்கிப் படகிலிருந்த 02 மீனவர்களும் ஹெரோயினை பெற்றுக் கொள்ளவிருந்த தம்பதியினருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் கோட்டகொட, தலல்ல மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 

கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கமைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 6,622 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் கடற்பரப்பில் கடந்த மாதம் 24ஆம் திகதியன்று, அந்நாட்டு படகொன்றின் ஊடாக குறித்த ஹெரோயின் தொகை வழங்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.