தனுஷ்க குணதிலக்க சார்பில் மேன்முறையீடு

தனுஷ்க குணதிலக்க சார்பில் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் நாளை (09) மேன்முறையீடு

by Bella Dalima 08-11-2022 | 7:55 PM

Colombo (News 1st) அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சார்பில் நாளை (09) அந்நாட்டின் மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய தயாராகி வருவதாக அவரது தரப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பெண் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது.

அவர் வௌிநாட்டு பிரஜை என்பதாலும் அவரால் அவுஸ்திரேலிய வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியாததாலும்  பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதற்கமைய, அவர் சார்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதான சட்டத்தரணி ஒருவர் ஊடாக அவுஸ்திரேலிய மேல்  நீதிமன்றம் ஒன்றில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தனுஷ்கவின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க, சட்டத்தரணி நிரோஷன பெரேரா மற்றும் சட்டத்தரணி அசேல ரெக்கவ ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக இந்த குழு விசாரணை நடத்தவுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தேசிய விளையாட்டு பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று அழைத்திருந்தார்.

இன்று பிற்பகல் T20 கிரிக்கெட் அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோரும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.