.webp)
Colombo (News 1st) ஹொரணை, மில்லனிய கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரின் பணத்தை திருடியதாக சந்தேகித்து 05 ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
ஆசிரியரின் பையிலிருந்த பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி, மாணவர்கள் சிலரை நூலகத்திற்குள் அழைத்துச் சென்று அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் அதிபரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த மாணவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் ஜீப் வண்டியிலிருந்த 03 மாணவர்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார தெரிவித்தார்.
மாணவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற ஜீப் வண்டியை மேலதிக விசாரணைகளுக்காக தமது பொலிஸ் பிரிவிற்கு கொண்டுசென்றுள்ளதாக அவர் கூறினார்.