தனுஷ்க குணதிலக்கவின் பிணை மனு நிராகரிப்பு

by Staff Writer 07-11-2022 | 2:38 PM

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியை தெரிவு செய்யும் போது, தனுஷ்க குணதிலக்கவின் பெயர் பரிசீலிக்கப்படாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கூறியுள்ளது.

அவுஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியாகக் கூறப்படும்  குற்றச்சாட்டிற்கு அமைய தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தனுஷ்க குணத்திலக்கவின் பிணை மனு சிட்னி நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ்க குணதிலக்க இன்று(07) காணொளி தொழில்நுட்பத்தினூடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவின் சசெக்ஸ் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று(06) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சிட்னி நகரின் கிழக்கு பகுதியில் தனுஷ்க குணதிலக்க தம்மை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 29 வயதான பெண்ணொருவர் சிட்னி பொலிஸாரிடம் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.