.webp)
Colombo (News 1st) மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் 16ஆவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த, ருக்மணி அம்பாள் ஞாபகார்த்த கிண்ண மென்பந்து கிரிக்கெட் தொடரில் நோ நேம்ஸ் சிக்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.
கொழும்பு பீ சரா ஓவல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த மென்பந்து கிரிக்கெட் தொடரில், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட 40 அணிகள் பங்குபற்றின.
இந்த மென்பந்து கிரிக்கெட் தொடரின் பிரதம விருந்தினராக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் மற்றும் விசேட விருந்தினராக கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் நிறைவேற்று குழுமப் பணிப்பாளர், ஷெவான் டானியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடரின் இறுதிப் போட்டிக்கு நோ நேம்ஸ் சிக்ஸ் மற்றும் ஹோட்டல் விஷாலா அணிகள் தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது நோ நேம்ஸ் சிக்ஸ் அணியின் ரமேஷிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த பந்துவீச்சாளராக அதே அணியின் சுபாஷ் லக்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.
தொடரின் மூன்றாவது இடத்தை எம்.கே.போய்ஸ் அணியினர் பெற்றுக் கொண்டனர்.
இறுதிப் போட்டியில் ஹோட்டல் விஷால் அணியை வெற்றி கொண்ட, நோ நேம்ஸ் சிக்ஸ் அணி, ருக்மணி அம்பாள் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்த போட்டித் தொடரின் அனுசரணையாளர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
தலைநகரின் வர்த்தக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் மற்றும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் நடத்திய ருக்மணி அம்பாள் ஞாபகார்த்த கிண்ண மென்பந்து கிரிக்கெட் தொடருக்கான இலத்திரனியல் ஊடக அனுசரணையை சக்தி TV, சக்தி FMம் மற்றும் நியூஸ்பெஸ்ட் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.