.webp)
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)கடனை இலங்கை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக Hindustan Times தகவல் வௌியிட்டுள்ளது.
இலங்கை எதிர்பார்த்ததைப் போன்று சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இந்த கடனை டிசம்பர் மாதத்தில் பெற்றுக்கொள்ள முடியாது என அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மாநாடு காரணமாக சீனா உடனான கடன் மறுசீரமைப்பிற்கான பேச்சுவார்த்தைகளை குறுகிய காலத்திற்கு நிறுத்தியுள்ளமையினால், IMF கடனை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக வாஷிங்டன் நிதி மூலம் ஒன்றை மேற்கோள் காட்டி Hindustan Times செய்தி வௌியிட்டுள்ளது.
எனவே, அடுத்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த நிறைவேற்றுக்குழு கூடும் வரை இலங்கை அதனை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இருதரப்பு மற்றும் பகிரங்க சந்தையில் பெற்றுக்கொண்ட வௌிநாட்டுக் கடன்களை மீள செலுத்துவதை இலங்கை நிறுத்தியுள்ளது. கடனை செலுத்துவதற்கான அந்நியச் செலாவணி இல்லாமையே இதற்கான காரணமாகும்.
மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் தகவல்களின் படி, இலங்கை இதுவரை 36 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது.
இதில் உள்ளடங்கும் இருதரப்பு கடன்களில் 52 வீதமான கடன்களை சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது.
19.5% கடன்களை ஜப்பானில் இருந்தும் 12% கடன்களை இந்தியாவில் இருந்தும் இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் IMF-இடம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதற்கு, செலுத்தாமல் உள்ள இந்த கடன்களை செலுத்துவதற்கான முறைமை ஒன்றை அவ்வமைப்பு எதிர்பார்க்கின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயற்படும் நிறுவனம் ஒன்று உள்ளது. அதுவே Paris Club எனப்படுகின்றது.
இலங்கை அதிகம் கடன் பெற்றுள்ள மூன்று நாடுகளில் ஜப்பான் மாத்திரமே Paris Club-இல் அங்கம் வகிக்கின்றது. சீனாவும் இந்தியாவும் அதில் இல்லை.
இந்தியா சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதினால், அவர்களுடன் கடன் தொடர்பில் கலந்துரையாட முறை ஒன்று உள்ளது.
எனினும், சீனாவே தற்போதுள்ள பிரச்சினையாகும்.
சீனா வழங்கியுள்ள கடனை மீள செலுத்துவது தொடர்பில் மீண்டும் சீனாவுடன் தான் கலந்துரையாட வேண்டும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம், கொழும்பு தாமரைக் கோபுரம் , அதிவேக வீதிகள் இவை சீனாவின் முதலீடுகள் ஆகும்.
இந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் கடனை செலுத்துவதற்கு போதுமானதா என்பதே தற்போதுள்ள பிரச்சினை.
இந்த நிலையில் கடனை செலுத்த முடியுமான அளவிற்கு வருமானத்தை அதிகரித்துக்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் கூறுகின்றது.
அரச செலவுகளை குறைத்தல், செலவுகளுக்கு ஏற்ப கட்டண முறைமை மாற்றம், ஊழல் எதிர்ப்பு செயற்பாடுகள் போன்றவற்றை கடன் வழங்கும் போது சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தும்