.webp)
Colombo (News 1st) T20 உலகக்கிண்ண போட்டியின் சுப்பர் 12 சுற்றில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களைக் குவித்தது.
விராட் கோஹ்லி 64 ஒட்டங்களையும் KL ராகுல் 50 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி அதிரடி ஆட்டத்தை வௌிப்படுத்தியது.
பங்களாதேஷ் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ஓட்டங்களைக் குவித்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தடைப்பட்டது. இதன்போது, பங்களாதேஷ் வெற்றி பெற 78 பந்துகளில் 119 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.
லிட்டன் தாஸ் 59 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
சில நிமிடங்களுக்கு பின் மழை நின்றதையடுத்து ஆட்டம் தொடங்கியது. அதேவேளை, மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது.
DLS முறைப்படி, பங்களாதேஷ் அணி 16 ஓவர்களில் 151 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
அந்த அணி ஏற்கனவே 7 ஓவர்களில் 66 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், இன்னும் 54 பந்துகளில் 85 ஓட்டங்களை எடுக்கவேண்டும். அதேசமயம், இந்திய அணி பங்களாதேஷின் விக்கெட்களை வீழ்த்தவேண்டிய கட்டாயத்தில் பந்துவீசத் தொடங்கியது.
லிட்டன் தாஸ் 60 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன.
கடைசி இரண்டு ஓவர்களில் 31 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் பரபரப்பானது.
16 ஓவர் முடிவில் பங்களாதேஷ் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களை எடுத்ததால், இந்தியா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் குரூப் B புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.