மட்டக்களப்பில் தொடர்ந்து மடியும் கால்நடைகள்; தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

by Bella Dalima 02-11-2022 | 8:25 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் உயிரிழக்கும் மாடுகளின் மாதிரிகள் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை 10 நாட்களுக்குள் கிடைக்கும் என மாகாண கால்நடை உற்பத்தி மற்றும்  சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கால்நடைகள் இறந்து வரும் நிலையில், இன்றும் அங்கு கால்நடைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்து தகவல்களை வௌியிட்டதையடுத்து, தற்போது கால்நடைகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று செங்கலடி மற்றும் கிரான் பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒரு இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்ற போதிலும் சுமார் 25,000 தடுப்பூசிகளே மாவட்டத்திற்கு கிடைத்துள்ளன.

பொருளாதார நெருக்கடி காரணமாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் ஏற்பட்ட பிரச்சினைகளே இதற்கான காரணம்.

இந்நிலையில், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப 18,000 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. அம்பாறை மாவட்டத்திற்கு 12,000 தடுப்பூசிகள் கிடைத்துள்ள போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அவசரத் தேவை நிலவுவதனால், அந்த 12,000 தடுப்பூசிகளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பின்னர் கிடைக்கும் தடுப்பூசிகள் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில், இறக்கும் மாடுகளை உடனடியாக புதைக்க வேண்டும் என சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். 

இறந்த கால்நடைகளை உடனடியாக புதைப்பதனால், சுகாதார பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இன்று எருமை மாடு ஒன்றின் விலை இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என்பதனால், சாதாரணமாக ஒருவருடைய ஐந்து மாடுகள் இறந்தால், அதன் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.

இவ்வாறு எத்தனையோ பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை கண் முன்னே இழந்துள்ளனர். 

நாடு பொருளாதார ரீதியில் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ள நிலையில்,  மாடுகளுக்கு பரவும் இந்த நோயினால்  பால் உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கர்ப்பம் தரித்த மாடுகளும்  இந்த நோய் தாக்கதிற்கு உள்ளாவதனால்  இதன் பாதிப்பு அதிகரிக்கலாம் என மாகாண கால்நடை உற்பத்தி மற்றும்  சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.