.webp)
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேகநபரான ரிஷாட் பதியுதீன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன், 111 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அதே வருடம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதன்முறையாக கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.