தமிழகத்தில் இலங்கையர்களுக்கு குடியுரிமை?

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா: உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் கேள்வி

by Staff Writer 01-11-2022 | 7:31 PM

Colombo (News 1st) இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர்  31 ஆம் திகதிக்கு முன்னதாக இந்தியா சென்று குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 டிசம்பரில் இயற்றப்பட்டது.

இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து, 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தலைமை நீதியரசர் யு.யு.லலித் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், நேற்று (31) இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டத்தரணி  வில்சன் வாதங்களை முன்வைத்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தின் பலனை மூன்று நாடுகளுக்கு மட்டும் என கட்டுப்படுத்துவதில் நியாயம் இல்லை எனவும் 
இதர அண்டை நாடுகளிலும் இதேபோன்ற துன்புறுத்தலை எதிர்கொள்ளும் சிறுபான்மையினர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர்களுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படுமா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்த சட்டத்தரணி, இதற்கு சொலிசிட்டர் ஜெனரலிடம் பதில் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை  டிசம்பர்  மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.