விஜயதாச ராஜபக்ச சபாநாயகருக்கு கடிதம்

தேர்தல் முறைமையை திருத்த தெரிவுக்குழுவை நியமிக்குமாறு விஜயதாச ராஜபக்ச சபாநாயகருக்கு கடிதம்

by Bella Dalima 29-10-2022 | 8:33 PM

Colombo (News 1st) தேர்தலை பிற்போடும் நோக்குடனேயே  தேர்தல் முறைமையை திருத்துவதற்காக தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தேர்தல் முறைமையை திருத்துவதற்காக பாராளுமன்ற  தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என கோரி நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான 15 விடயங்கள் அதில் அடங்குகின்றன

பாராளுமன்றத்திற்கு, மாகாண சபைகளுக்கு அல்லது உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது பொருத்தமான தேர்தல் முறைமையைக் கண்டறிந்து அறிக்கையிடுவதற்கும், அதற்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு விஜயதாச ராஜபக்ச அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெரிவுக்குழுவின் தலைவராக சபாநாயகர் செயற்பட வேண்டும் எனவும் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் சபாநாயகரால் பெயரிடப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்  தொடர்பாக பொருத்தமான  முறைமை தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பரிந்துரைப்பது சிறந்தது என ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.