1300 வகையான மருந்துகளுக்கு முற்பதிவு

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 1300 வகையான மருந்துகளுக்கு முற்பதிவு

by Bella Dalima 29-10-2022 | 3:17 PM

Colombo (News 1st) இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 1300 வகையான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தவிர 1200 இற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சை உபகரணங்களும் இந்திய கடன் திட்டத்தின் ஊடாக முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் குறித்த மருந்துகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் தற்போது 120 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு மாத்திரமே தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இந்திய கடனுதவியின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான அனைத்து முற்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்வதில் சிறிது தாமதம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் 14 வகையான உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, காயங்களுக்கு பயன்படுத்தப்படும் பஞ்சுகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக சில தொழிற்சங்கங்கள் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 6 மாதங்களுக்கு போதுமான  பஞ்சு கையிருப்பில் உள்ளமை தெரியவந்துள்ளது.

சில மருந்துப்பொருட்கள் களஞ்சியசாலைகளில் காணப்படுகின்ற போதிலும், தொடர்பாடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக அவற்றை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 


 

ஏனைய செய்திகள்