Crypto Currency மோசடி: 8000 இலங்கையர்களிடம் 1400 கோடி ரூபாவை கொள்ளையிட்ட சீன தம்பதி

by Bella Dalima 28-10-2022 | 7:01 PM

Colombo (News 1st) நாட்டில் சீன தம்பதியினரால் 1400 கோடி ரூபாவிற்கும் அதிகத் தொகை கொள்ளையிடப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வௌிக்கொணர்ந்துள்ளனர். 

Crypto Currency முறையில் இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஹோட்டல்களில் கருத்தரங்குகளை நடத்தி, பல்வேறு தரப்பினரை ஏமாற்றி கையடக்க தொலைபேசி மூலம் இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

இந்த வர்த்தகத்தின் பிரதான சந்தேகநபர் சீன யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளது. 

முதலீடு செய்யும் தொகையை விட அதற்கு மேலதிகமான தொகையை வருமானமாக ஈட்டிக்கொள்ள முடியும் என தெரிவித்து 8000-இற்கும் அதிகமானோரின் பணத்தை இவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. 

நிதி வைப்பிலிட்டதன் பின்னர் வைப்பீட்டாளர்களின் கணக்கில் ஐந்து மடங்கு இலாபம் அதிகரித்துள்ளதாக காண்பித்திருக்கின்றனர். எனினும், வைப்பீட்டாளர்களால் அந்த இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

இதனையடுத்து, தமது வருமானமும் வைப்பிலிடப்பட்ட பணமும் காணாமற்போயுள்ளதாக சிலர் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணையின் போது, பெருந்திரளானோரின் வருமானமும் பணமும் காணாமற்போயுள்ளமை தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் சீன தம்பதியும் இலங்கையர் ஒருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஏனைய செய்திகள்