.webp)
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கும் கோவை கார்க்குண்டு வெடிப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.
கோவை கார்க்குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பெரோஸ் இஸ்மாயில் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய முகமது அசாருதீன் என்பவரை கேரள சிறையில் சந்தித்து உரையாடியுள்ளமை தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கேரளாவின் வியூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள சர்வதேச குற்றவாளியான முகமது அசாரூதீன் மற்றும் ரஷீத் அலியை தற்போது கோவை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெரோஸ் சந்தித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் முகமது அசாருதீன் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதால், சந்திப்பின் நோக்கம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ISIS அமைப்புடன் நேரடி தொடர்புகளைப் பேணிய அசாரூதீன் என்பவருடனும் விபத்தில் பலியான ஜமீஷா முபின் தொடர்புகளை பேணியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கேரளாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஜ்மத் அலி என்பவரை முபின் 2020 ஆம் ஆண்டு சந்தித்துள்ளமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோயம்புத்தூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இதனிடையே, கோவை கார் வெடிப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அறுவரையும் அவரவர் வீடுகளுக்கு அழைத்துச்சென்று பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாரிய குண்டு வெடிப்பு நடத்தும் நோக்கில் வெடிபொருட்கள் பதுக்கப்பட்டிருக்கும் என சந்தேகிப்பதால், தேசிய புலனாய்வு முகமை சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வழிநடத்திய குழுவின் தலைவராக செயற்பட்ட சஹ்ரான் ஹாஷிமிற்கும் கார்க்குண்டு வெடிப்பில் உயிரிழந்த முபினுக்கும் இடையில் தொடர்புகள் இருந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறையினரை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பேஸ்புக் வாயிலாக இவர்கள் இருவரும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் 11 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவருடன், தற்போது கைது செய்யப்பட்ட 06 சந்தேகநபர்களும் தொடர்புகளை பேணியுள்ளதாகவும் இந்திய பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் 46 பேர் உயிரிழந்தனர்.