யால விவகாரம்: சரணடைந்த 9 பேருக்கு பிணை

யால விவகாரம்: சரணடைந்த 9 பேருக்கு பிணை

by Staff Writer 26-10-2022 | 5:30 PM

Colombo (News 1st) ஜீப்களில் யால சரணாலயத்திற்குள் நுழைந்து சட்டத்தை மீறி செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 9 பேர், 7 ஜீப்களுடன் இன்று திஸ்ஸமஹராம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் இவர்கள் 9 பேரும் 7 ஜீப்களுடன் யால சரணாலயத்தின் பிரதான அலுவலகத்தில் சரணடைந்துள்ளதுடன், பின்னர் வனஜீவராசிகள் அதிகாரிகள் மூலம் திஸ்ஸமஹாரா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த 9 சந்தேகநபர்களையும் 5 இலட்சம் ரூபா வீதமான சரீரப் பிணையில் விடுக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த சனிக்கிழமை 33 ஜீப்களில் சுமார் 100 பேர் யால சரணாலயத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

இவர்கள் யால சரணாலயத்தில் ஜீப் வண்டிகளில் பயணித்த விதம் தொடர்பான பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினால் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஐவரடங்கிய குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கடமைகளை உதாசீனம் செய்தமை மற்றும் சம்பவத்துடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த 7 அதிகாரிகளும் தற்காலிகமாக விசாரணைகள் நிறைவடையும் வரை பணி நீக்கப்பட்டுள்ளனர்.