பூண்டுலோயா - கொத்மலை வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்திற்கு இடையூறு

by Staff Writer 26-10-2022 | 1:20 PM

Colombo (News 1st) பூண்டுலோயா - கொத்மலை பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்று(26) பெய்த கன மழை காரணமாக மேல் கொத்மலை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. 

மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமை காரணமாக தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியுடனான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா மற்றும் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டில் மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பூண்டுலோயா - கொத்மலை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார், பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். 

இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று(26) மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று(26) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கம் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.