மாவனெல்லையில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பெண் பலி, 37 பேர் காயம்

by Bella Dalima 25-10-2022 | 3:31 PM

Colombo (News 1st) மாவனெல்லை - உதுவன்கந்த பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதி இன்று பகல் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கேகாலையிலிருந்து கண்டி நோக்கி தனியார் பஸ் பயணித்துள்ளதுடன், மாவனெல்லையிலிருந்து கேகாலை நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் பயணித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 38 பேர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்துடன் தொடர்புடைய இரண்டு பஸ்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனெல்லை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.