.webp)
Colombo (News 1st) எரிசக்தி துறையின் மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை மற்றும் இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களுக்கான யோசனைகள் குறித்தும் தேசிய சபைக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தேசிய சபைக்கு அறிவித்தார்.
தேசிய சபை, அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
இதன்போது, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை ஆகிய நிறுவனங்கள் தேசிய சபைக்கு அழைக்கப்பட்டதுடன், துறையின் முன்னேற்றம் தொடர்பான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை அதிகாரிகள் முன்வைத்தனர்.
இதேவேளை, பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் விசேட ஏற்பாடு திருத்த சட்டம் நேற்று (21) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக அனுமதி பெறுபவர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பில் பங்குதாரர்களை தெரிவு செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தல் இந்த திருத்தத்தின் நோக்கமாகும்.