பொலிஸார் இருவருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

ஆர்ப்பாட்டப் பேரணியை தடுத்து நிறுத்திய பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்

by Bella Dalima 21-10-2022 | 8:33 PM

Colombo (News 1st) உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளின் தில்ருக் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் ஆகியோரை எதிர்வரும் 8 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.

இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன தாக்கல் செய்திருந்த தனிப்பட்ட மனு இன்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் இருந்து புதுக்கடை நோக்கி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியை தடுத்து, முறையற்ற வகையில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளின் தில்ருக் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் ஆகியோருக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளராக தரிந்து ஜயவர்தன சார்பில் சட்டத்தரணி மனுஜய டி சில்வா, சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகேவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.