டொனால்ட் லூ இலங்கை விஜயம்

சிவில் சமூக பிரதிநிதிகளுடன் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் கலந்துரையாடல்

by Bella Dalima 20-10-2022 | 7:06 PM

Colombo (News 1st) இலங்கைக்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu) சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து  கலந்துரையாடியுள்ளார். 

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இந்த சந்திப்பு நேற்று (19)  இடம்பெற்றுள்ளது. 

குறித்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில்  பதிவிட்டுள்ளார். 

புறக்கணிக்கப்பட்ட  சமூகங்களுக்கு சேவை செய்வதிலும் குரல் கொடுப்பதிலும் வலுவான  சிவில்  சமூகம் முக்கியமானது என குறித்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவுடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  ஜூலி சங்கும் இணைந்து சிவில் சமூகத் தலைவர்களை சந்தித்துள்ளார். 

தற்போதைய சவால்கள், ஒன்றிணைந்து எவ்வாறு பொறுப்புக்கூறலை மேம்படுத்துவது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும்  சவால்களுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான பங்களிப்பு , அனைத்து  இலங்கையர்களுக்கும் பயனளிக்கக்கூடிய பொருளாதார வௌிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் தொடர்பில் கரிசனை செலுத்துவதற்காக, இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளருக்கு நன்றியைத் தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.