கரைக்கு திரும்புமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு

கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

by Bella Dalima 20-10-2022 | 6:10 PM

Colombo (News 1st) வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களை அண்மித்து உருவாகும் தாழமுக்க வலயம் எதிர்வரும் 22 ஆம் திகதி மேல் மற்றும் வடமேல் திசை நோக்கி பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாழமுக்க நிலையானது எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன் பின்னர் வடக்கு மற்றும் வடமேல் திசை நோக்கி பயணிப்பதுடன், எதிர்வரும் 25 ஆம் திகதி மேல் வங்காள கடற்பிராந்தியத்தை அண்மிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டராக அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. 

நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.