கால்பந்து சம்மேளன தேர்தலை நடத்த இணக்கம்

இலங்கை கால்பந்து சம்மேளன தேர்தலை 69 நாட்களுக்குள் நடத்த விளையாட்டுத்துறை அமைச்சு இணக்கம்

by Bella Dalima 20-10-2022 | 4:08 PM

Colombo (News 1st) இலங்கை கால்பந்து சம்மேளன தேர்தலை இன்று (20) முதல் எதிர்வரும் 69 நாட்களுக்குள் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக சட்ட மா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சிமதி தர்மவர்தன இதனை குறிப்பிட்டார்.

கடந்த 11 ஆம் திகதி நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, விளையாட்டு அமைச்சின் உதவி செயலாளர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

விரைவாக தேர்தலை நடத்தாவிடின், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் தடை விதிக்கப்படக்கூடும் என முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி திமுது களுஆராச்சியின் குழுவினரான சட்டத்தரணி இராஜ் டி சில்வா மன்றுக்கு அறிவித்தார்.

இதனால் சேவை பெறுநர்களுடன் கலந்துரையாடி, கால்பந்து சம்மேளனத்தின் தேர்தலை நடத்துவதற்கான திகதியை கலந்தாலோசிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரான ஈஸ்வர் உபர் மற்றும்  உபாலி ஹேவகே ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.