காலியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; குழந்தை உள்ளிட்ட இருவர் காயம்

by Bella Dalima 19-10-2022 | 3:35 PM

Colombo (News 1st) காலி - யக்கலமுல்ல, களுவலகலயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

33 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 3 வயது குழந்தையும் 24 வயதான இளைஞரும் மாத்தறை மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

யக்கலமுல்ல - மாகெதர, கருவலகல பகுதியில் கறுவா வாடியில் இந்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

கறுவா வாடியில் கறுவாவை பதப்படுத்திக்கொண்டிருந்த  சமன் குமார என்ற 33 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ஊருகஹ பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரினால் S 84 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊருகஹவை சேர்ந்த உயிரிழந்த நபர் யக்கலமுல்ல கருவகல பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளதுடன், மனைவியின் வீட்டிற்கு அருகில் கறுவாவை பதப்படுத்துவதற்காக சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதுடன்,உயிரிழந்தவரின் தந்தையும் பிள்ளையும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அதன் பின்னர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை அச்சுறுத்தி, மோட்டார் சைக்கிளையும் அபகரித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொலை வழக்கொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபராவார்.

2019 செப்டம்பர் 6 ஆம் திகதி, எல்பிட்டிய - அடகோட்டை , போகாஹாவங்குவ அருகில் ஒருவர் பஸ் ஒன்றில் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்நபர் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார். 

குறித்த கொலைச்சம்பவத்தின் 4 ஆவது சந்தேகநபர், கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி எல்பிட்டிய ஊருகஸ்மங்ஹந்திய - நுகொடமுல்ல பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.