காட்டு யானை தாக்கியதில் 2 நாட்களில் ஐவர் பலி

கிழக்கு மாகாணத்தில் காட்டு யானை தாக்கியதில் 2 நாட்களில் ஐவர் உயிரிழப்பு

by Staff Writer 17-10-2022 | 4:43 PM

Colombo (News 1st) கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த 02 நாட்களில் மாத்திரம் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் மூவர் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு - முனைத்தீவு பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் இன்று(17) அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இன்று(17) அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக வெல்லாவௌி உதவி வனஜீவராசிகள் உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.

முனைத்தீவு பகுதியை சேர்ந்த 69 வயதான ஒருவரே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை - தங்கநகர் பகுதியில் 48 வயதான ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்று வீடு திரும்புகையில் இன்று(17) அதிகாலை காட்டு யானை தாக்கியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பொத்துவில் மூன்றாம் கட்டை பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வயலில் வேலை செய்துகொண்டிருந்த போதே குறித்த நபர் நேற்று(16) யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பொத்துவில் பாக்கியாவத்த பகுதியை சேர்ந்த 49 வயதான ஒருவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடாவட்டை கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் நேற்று(16) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவரின் மனைவியும் கடந்த ஜூன் மாதம் காட்டு யானை தாக்கி உயிரிழந்திருந்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு - சில்லிக்கொடியாற்றில் காட்டு யானை தாக்கி மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

சில்லிக்கொடியாறு பகுதியில் மரக்கறி தோட்டமொன்றில் பராமரிப்பாளராக வேலை செய்த ஒருவரையே நேற்று முன்தினம்(15) இரவு காட்டு யானை தாக்கியுள்ளது.