.webp)
Colombo (News 1st) மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த பிரதேசங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 15,632 குடும்பங்களை சேர்ந்த 61,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,661 குடும்பங்களை சேர்ந்த 5,460 பேர் 33 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அனர்த்தங்களினால் 05 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
207 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரண திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க குறிப்பிட்டார்.