.webp)
Colombo (News 1st) இம்முறை உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் நாளை (16) ஆரம்பமாகவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் ஆசிய சாம்பியனான இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்ளவுள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் உலகக்கிண்ண T20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை ஏழு தடவைகள் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி 2012, 2016 ஆம் ஆண்டுகளில் சாம்பியனாக தெரிவானது.
2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ண கிரிக்கெட் உப சாம்பியனான இலங்கை இம்முறை ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் களம் காண்கின்றது.
2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற T20 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை இலங்கை கைப்பற்றியதுடன், இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
1996 ஆம் ஆண்டு அர்ஜூன ரணதுங்கவின் தலைமையில் முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி, லசித் மாலிங்க தலைமையில் T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்றில் இடம்பிடித்தது.
2016, 2021 ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் அணியும் அவுஸ்திரேலிய அணியும் உப சாம்பியனாக தெரிவாகின.
எட்டாவது தடவையாக நடைபெறவுள்ள தொடரில் வெற்றி யாருக்கு என்ற எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் நாளை அவுஸ்திரேலியாவில் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒரு தடவை கிண்ணத்தை சுவீகரித்துள்ளன.
இம்முறை தொடரில் 16 அணிகள் விளையாடவுள்ளன.
நாளை ஆரம்பமாகவுள்ள தகுதிகாண் சுற்றில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், ஸ்கொட்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் சிம்பாப்பே ஆகிய அணிகள் மோதவுள்ளன.
கார்டினியா பார்க்கிலுள்ள ஜிலோங்க் விளையாட்டரங்கில் ஆசிய சாம்பியனான இலங்கை அணி நமீபியாவை நாளை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த விளையாட்டரங்களில் இதுவரை ஒரேயொரு T20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளதுடன், இந்தப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை தோற்கடித்திருந்தது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நமீபியாவை எதிர்கொண்ட இலங்கை அணி 7 விக்கட்களால் வெற்றியீட்டியது.
மற்றுமொரு தகுதிகாண் சுற்றில் ஐக்கிய அரபு இராச்சியமும் நெதர்லாந்தும் மோதவுள்ளன.
இம்முறை T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் உள்நாட்டு ஔிபரப்பு உரிமத்தைக் கொண்டுள்ள சிரச TV அனைத்து போட்டிகள் தொடர்பிலான தகவல்களையும் நேரலையாக Sports 1st -இல் கொண்டுவரத் தயாராகவுள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் உள்நாட்டு ஔிபரப்பு உரிமத்தைக் கொண்டுள்ள சிரச TV, நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் ஔிபரப்பு சேவைகளை விஸ்தரித்துள்ளது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிரச TV சக்தி TV-யுடன் இணைந்து ஔிபரப்பை விஸ்தரித்துள்ளது.
வீட்டில் இருந்து சிரச தொலைக்காட்சியின் ஊடாக உங்களினால் போட்டிகளை பார்வையிட முடியாவிட்டால், kiki.lk இணையதளத்தின் ஊடாக சிரச TV-இல் ஔிபரப்பாகும் உலகக்கிண்ண தொடரை இலவசமாக பார்வையிட முடியும்.