மைத்திரிபாலவிற்கு எதிரான வழக்கை 10 வாரங்களுக்கு முன்னெடுக்க வேண்டாம் என உத்தரவு

by Bella Dalima 14-10-2022 | 4:00 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் நடவடிக்கைகளை இன்று (14) முதல்  எதிர்வரும் 10 வாரங்களுக்கு முன்னெடுப்பதை தவிர்க்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வௌியிடப்பட்ட அறிவித்தல் உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இந்த எழுத்தாணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த எழுத்தாணை மனு மீதான விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

இதேவேளை, நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நீதிமன்ற அறிவித்தலை வலுவிழக்கச் செய்வதற்கான இடைக்கால உத்தரவு எதுவும் இன்று பிறப்பிக்கப்படவில்லை.