நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவு

by Bella Dalima 14-10-2022 | 3:40 PM

Colombo (News 1st) நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று (14)  காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதற்கமைய, அதிகூடிய மழைவீழ்ச்சியாக 194 .50 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி களுத்துறை - ஹொரணையில் பதிவாகியுள்ளது.

இதனை தவிர இங்கிரிய, ஹல்வத்துர, அரகாவில, ஹெகொட, தெய்வேந்திரமுனை, நுவரெலியா- களுகல மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று முதல் பெய்து வரும் மழையினால் நாட்டின் சில பகுதிகளில்  வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பொல்கொல்ல மகாவலி அணையின் வான்கதவுகள் மூன்று அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.

இதனால் இன்று காலை முதல் நிமிடத்திற்கு 700 கன அடி வீதம் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்துவிடப்படும் என மகாவலி அணையின் பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொல்கொல்ல மகாவலி அணையின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு பொல்கொல்ல மகாவலி அணையின் பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.