39 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள்

குறைந்த வருமானம் பெறும் 39 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம்

by Bella Dalima 14-10-2022 | 4:11 PM

Colombo (News 1st) "எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்திற்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அவற்றுள் 6,24,714 விண்ணப்பங்கள் நேற்று முன்தினம் வரை தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கான முன்னோடி திட்டம் அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்றதுடன், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

தற்போது நலன்புரித் திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் அல்லது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 3.3 மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிகமாக, 600,000 குடும்பங்கள் COVID இரண்டாம் அலை மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக புதிதாக குறை வருமான நிலையை அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், குறித்த 6 இலட்சம் குடும்பங்களும் இதற்காக விண்ணப்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலன்புரி உதவித் திட்டத்திற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வௌியிடப்படவுள்ளது.

அன்றைய தினம் பிரதேச செயலக மட்டத்தில் பெயர்ப் பட்டியல் அறிவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

39 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் நலன்புரி உதவிகளைப் பெறவுள்ளன. 

நிதி உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போர் நாளை (15) வரை மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.