.webp)
Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி அறிவித்தல் பிறக்குமாறு தெரிவித்து கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் வகித்த பதவிகளில் இருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காகவே நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்படவுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா முன்வைத்த விடயங்களை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த இருவர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இடைக்கால தடையுத்தரவு மற்றும் அறிவித்தல் பிறப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், மத்திய குழு உறுப்பினர், அரசியல் குழு உறுப்பினர் மற்றும் பதுளை மாவட்டத் தலைவர் உள்ளிட்ட தாம் வகித்த சகல பதவிகளையும் தாம் தொடர்ந்தும் வகிப்பதாக உத்தரவிடுமாறு நிமல் சிறிபால டி சில்வா தமது மனுவில் கோரியுள்ளார்.