சனத் நிஷாந்தவிற்கு கடும் எச்சரிக்கை; நீதிமன்ற உத்தரவு மீள பெறப்பட்டது

by Bella Dalima 13-10-2022 | 7:33 PM

Colombo (News 1st) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு உரிய நேரத்தில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீள பெறப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தாமதமாகி நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்து, கடுமையான எச்சரிக்கையின் பின்னர் உத்தரவை நீதிமன்றம் மீள பெற்றுள்ளது. 

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பொதுஜன பெரமுன கட்சி தலைமைகத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக தெரிவித்து, நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதிகளைக் கொண்ட நீதிச்சேவை சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் அடங்கிய தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்ற போது, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷாந்த ஜயவர்தன  இராஜாங்க அமைச்சர் இன்று வருகை தராமையால், வழக்கை பிறிதொரு நாளில் விசாரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

சில நிமிடங்களின் பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சனத் நிஷாந்த சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா  வழக்கு தொடர்பிலான அறிவித்தல் மற்றும் ஆவணங்கள் உரிய முறையில் கிடைக்காமையால் தமது சேவை பெறுநர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவித்தார்.

எனினும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முறைப்பாட்டு தரப்பு சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சாலிய பீரிஸ் மற்றும் உபுல் ஜயசூரிய ஆகியோரது கருத்துகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழாம், இராஜாங்க அமைச்சரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கும் வகையில் பிடியாணை பிறப்பித்தார்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில நிமிடங்களின் பின்னர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிமன்றத்தை அவமதித்தவர்கள் இதற்கு முன்னர் எதிர்கொண்ட நிலைமை தொடர்பில் உங்களுக்கு தெரியுமா என பிரதிவாதியான சனத் நிஷாந்தவிடம்  நீதிபதிகள் குழாத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன வினவினார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சிறிது நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராவது தொடர்பில் கவனம் செலுத்தியமையால், இறுதி சந்தர்ப்பமாக இராஜாங்க அமைச்சருக்கு மன்னிப்பு வழங்குவதாக நீதிபதிகள் குழாத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

இதற்கு பின்னர் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சனத் நிஷாந்தவிற்கு நீதிபதி எச்சரித்தார்.

மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.