.webp)

Colombo (News 1st) 2022 மகளிருக்கான ஆசியக் கிண்ண T20 கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் கிரிக்கட் அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்தி, இலங்கை மகளிர் அணி இந்த வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொண்டது.
பங்களாதேஷின் சில்ஹெட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 122 ஓட்டங்களைப் பெற்றது.
அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். அணித்தலைவி சமரி அத்தபத்து 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் நஷ்ரா சந்து 3 விக்கட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் அணித்தலைவி பிஸ்மா மரூப் 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
2022 மகளிருக்கான ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 01 மணிக்கு சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
