போதைப்பொருளுக்கு அடிமையான மகனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த தாய்; சுன்னாகத்தில் சம்பவம்

by Bella Dalima 12-10-2022 | 6:58 PM

Colombo (News 1st) வட மாகாணத்தில் சட்டவிரோத போதைப்பொருளுடன் தொடர்புடைய பல்​வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. 

இதனிடையே, யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவர் தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக முறைப்பாடு செய்த சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு கிராமத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது 15 வயதான மகன் அதிகளவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுவன் பொலிஸாரால் நேற்று பொறுப்​பேற்கப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து ,அச்சிறுவனை அச்சுவேலி அரச சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அச்சுவேலி அரச சான்று பெற்று சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் போதைப்பொருள் பாவனையினால் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.