.webp)
Colombo (News 1st) T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சம்பவம் இன்று அஹூங்கல்லயில் பதிவானது.
இன்று (12) நண்பகல் 12 மணியளவில் கார் ஒன்றில் பயணித்த ஒருவர் அஹுங்கல்ல முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
எனினும், துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானவர் துப்பாக்கிதாரியை மடக்கிப் பிடிக்க முயற்சித்த போது அவர் தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அஹூங்கல்ல - கல்வெஹர வீதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து T56 ரக வெற்றுத்தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கும் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் ஏற்கனவே இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுக்கும் இடையே தொடர்புள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அருகில் நின்றிருந்த ஒருவரின் உதவியால், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் உயிர் தப்பியமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்காக எல்பிட்டிய குற்றத்தடுப்புப் பிரிவும் அஹுங்கல்ல பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
கடந்த மே மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தென் மற்றும் மேல் மாகாணங்களில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் 32 பேர் உயிரிழந்து, 15 பேர் காயமடைந்துள்ளனர்.
