சட்டத்தை மீறினாரா நயன்தாரா?

வாடகைத் தாய் மூலம் குழந்தை; சட்டத்தை மீறினாரா நயன்தாரா?

by Bella Dalima 11-10-2022 | 4:24 PM

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. 

அவர்கள் சட்டத்திற்கு முரணாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்களா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

வாடகைத் தாய் முறை என்பது குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதியருக்காக சட்டப்படி உருவாக்கப்பட்ட மருத்துவ அமைப்பு. அதனை வழிநடத்த சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த சட்ட விதிகளுக்கு முரணாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாகக் கூறப்படுவதுதான் சர்ச்சையாகியுள்ளது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள என்ன தகுதி?

இந்திய சட்டப்படி, ஒரு தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான தகுதிச் சான்றுகள் மற்றும் தேவை குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு தகுதி பெற்ற தம்பதி திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை இல்லாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். அந்த தம்பதியினரில் மனைவியின் வயது 25 - 50 ஆகவும், கணவரின் வயது 26 - 55 ஆகவும் இருக்க வேண்டும். தம்பதிக்கு ஏற்கனவே பிறந்த, தத்தெடுத்த, வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகள் என யாரும் இருக்கக் கூடாது. ஆனால், இதில் மனநிலை மற்றும் உடல் மாற்றுத்திறனாளி, உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருப்பின் விதிவிலக்கு. தம்பதியரில் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லை என்பதற்கான மருத்துவ சான்றினை பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதில் அடிப்படையான சட்ட விதியாக இருக்கும் குறைந்தபட்சம் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில சட்ட விதிகளுக்கு எதிராகவே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலில் வாடகைத் தாய் மூலம்தான் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொண்டாரா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பிறகு அவர் இந்தியாவில் இருக்கிறாரா, வெளிநாட்டில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கிறாரா, இந்த சட்ட விதிகள் அந்நாட்டுக்கு பொருந்துமா, அந்நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கேள்விகள் எழத்தான் செய்கின்றன.