.webp)

Colombo (News 1st) அமெரிக்காவை சோ்ந்த மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் குறித்தும் நிதி நெருக்கடி தொடா்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக 2006 முதல் 2014 வரை பணியாற்றிய Ben Bernanke, Douglas Diamond மற்றும் Philip Dybvig ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான அறிவிப்பை ஸ்டாக்ஹோம் நகரில் திங்கள்கிழமை வெளியிட்ட தெரிவுக் குழு தலைவா் ஜான் ஹேஸ்லா்,
நிதி நெருக்கடியும் பொருளாதார வீழ்ச்சியும் நாட்டிற்கு பெரும் இன்னல் விளைவிக்கக்கூடியவை. அவை ஒருமுறை மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, அவை குறித்து தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அந்த புரிதலை வெளிப்படுத்திய நிபுணா்களுக்கே நடப்பாண்டிற்கான பொருளாதாரத்திற்குரிய நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. வங்கிகள் சந்திக்கும் நிதி நெருக்கடியைக் கண்டுகொள்ளாமல் ஏன் இருக்கக் கூடாது என்பதற்கான விடையை நிபுணா்கள் மூவரும் வழங்கியுள்ளனா். உலக நாடுகள் 2008-ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, அதில் இருந்து மீள்வதற்கு மூவரின் ஆராய்ச்சிகளும் முக்கியப் பங்கு வகித்தன
என குறிப்பிட்டுள்ளார்.
1930-ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கு வங்கிகளின் தோல்வியே முக்கிய காரணம் என தனது 1983 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் Ben Bernanke வெளிப்படுத்தினாா். வங்கி அமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்ததே நவீன வரலாற்றின் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்ததென அந்த அறிக்கையில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை உலக நாடுகள் சந்தித்தபோது, அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக Ben Bernanke செயற்பட்டாா். அப்போது, அமெரிக்க நிதித் துறையுடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அவா் விரைந்து மேற்கொண்டாா். தற்போது வாஷிங்டன் புரூகிங்ஸ் நிறுவனத்தில் அவா் பணியாற்றி வருகிறாா்.
சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரான Douglas Diamond, வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியரான Philip Dybvig ஆகியோா் நிதி நெருக்கடியின் விளைவுகள் குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டனா். வங்கிக் கடன்களுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதன் மூலமாக நிதி நெருக்கடியின் விளைவுகளைத் தடுக்க முடியும் என அவா்கள் தெரிவித்தனா். வங்கியை முறையாக நிா்வகிப்பது தொடா்பாக 1983-ஆம் ஆண்டில் அவா்கள் இருவரும் இணைந்து ஆய்வறிக்கையை வெளியிட்டனா்.
2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது மூவரின் ஆராய்ச்சிகளும் முதலீட்டாளா்களுக்கு பெருமளவில் உதவியதாக நோபல் பரிசு தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
