.webp)
Colombo (News 1st) வாக்களிப்பு முறைமை தொடர்பில் தீர்மானிப்பதற்காக தெரிவுக் குழுவொன்றை பிரேரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த தெரிவுக்குழு அடுத்த வருடம் ஜூலை மாதமாகும் போது தீர்மானமொன்றை முன்வைக்காவிட்டால் மக்கள் கருத்துக்கணிப்பை நடத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(09) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்தக் கருத்துகளை வௌியிட்டுள்ளார்.
நாட்டின் பெரும்பாலானவர்கள் தற்போதைய அரசியல் முறையை நிராகரிப்பதால் அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதற்கமைய பிரதேச சபை, மாநகர சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000 இலிருந்து 4,000 வரை குறைத்து மக்கள் சபை திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பிரதேச சபைகளின் நிறைவேற்றதிகாரத்தை தவிசாளருக்கு மாத்திரம் வழங்குவதற்கு பதிலாக தவிசாளர் உள்ளடங்கிய குழுவிடம் வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரசியல் ஊழல்களுக்கான பிரதான காரணம், விருப்பு வாக்கு முறைமையே என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விருப்பு வாக்கு முறைமையல்லாத பட்டியல் முறைமை அல்லது கலப்பு தேர்தல் முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தேர்தலுக்காக செலவிடப்படும் நிதியை குறைப்பதற்காக தேர்தல் சட்டங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.