.webp)
Colombo (News 1st) கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நந்துன் சிந்தக ஒக்டோபர் 03ஆம் திகதி துபாய் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹரக் கட்டாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சின் தாமதம் காரணமாக துபாய் அதிகாரிகளுக்கு வழங்க முடியாமற்போனதாலேயே அவர் விடுவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குற்றவியல் திணைக்களத்தின் கீழுள்ள தேசிய மத்திய பணியகம் வழங்கிய சிவப்பு அறிவித்தலைத் தொடர்ந்து சந்தேகநபர் ஆகஸ்ட் 19 ஆம் திகதி துபாயில் கைது செய்யப்பட்டார்.
இதன் பிரகாரம், குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருமாறு கோரி கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பாதுகாப்பு அமைச்சிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டது.
குறித்த நபர் தொடர்பாக தயாரிக்கப்பட்ட கடிதம் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சின் சட்ட அதிகாரிகளால் கடந்த 13 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
அதனையடுத்து, செப்டம்பர் 14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு இந்த விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்தது.
அத்துடன், செப்டம்பர் 26 ஆம் திகதி சட்டமா அதிபர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
சந்தேகநபரை விடுவிக்க வேண்டாம் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு செப்டம்பர் 30 ஆம் திகதி துபாயிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, உரிய ஆவணங்கள் எவ்வித தாமதமுமின்றி 24 மணித்தியாலங்களுக்கும் குறைந்த காலத்திற்குள் பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன.
அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.