மினுவாங்கொடை முக்கொலை: 6 பேருக்கு விளக்கமறியல்

மினுவாங்கொடை முக்கொலை: 6 சந்தேகநபர்களுக்கு ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 08-10-2022 | 5:24 PM

Colombo (News 1st) மினுவாங்கொடை - கமன்கெதர பகுதியில் மூவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 06 சந்தேகநபர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட பதில் நீதவான் சஞ்சீவ ஹெட்டியாராச்சி முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்காக முகத்தை மூடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பதில் நீதவான், நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொலைக் குற்றத்திற்கு சந்தேநபர் ஒருவர் பயன்படுத்திய பாதணிகள், பொலிஸ் சீருடைக்கு ஒத்த ஆடை, 02 கத்திகள் என்பன கட்டான வீதியின் தாகொன்ன பகுதியிலுள்ள தெங்குக்காணி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரியை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொட - கமன்கெதரயில் கடந்த 06 ஆம் திகதி ஆண் ஒருவரும் அவரது 02 மகன்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

பட்டம் விடும் நிகழ்வில் ஏற்பட்ட மோதல் நீடித்து, மூன்று பேரின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது.

தந்தையும் 2 மகன்களும் நேற்று முன்தினம் காலை 6.30 அளவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த சந்தேகநபர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்களின் தாயையும் சகோதரியையும் வீட்டிலிருந்து வௌியில் செல்லுமாறு அறிவித்ததன் பின்னரே சந்தேகநபர்களால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.