கோட்டாபய அரசிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க அனுமதி

கோட்டாபய அரசிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க அனுமதி; கணக்காய்வு மேற்கொள்ளுமாறும் உத்தரவு

by Bella Dalima 07-10-2022 | 4:19 PM

Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 2 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட அப்போதைய அமைச்சரவை, மத்திய வங்கியின் ஆளுநர்களான பேராசிரியர் W.D.லக்ஸ்மன், அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் நிதிச்சபை மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தர ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கலாநிதி மஹீம் மென்டிஸ், கலாநிதி அத்துலசிறி சமரகோன் மற்றும் கலாநிதி நெவிஸ் மொராயஸ் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனுக்கள் மீதான விசாரணைக்கு அனுமதி வழங்கிய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், உடனடியாக கணக்காய்வை மேற்கொண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதியை 203 ரூபா என்ற வரையறைக்கு முன்னெடுத்துச் சென்றமை, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதம், இந்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் முறிகளை மீள செலுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் நிதி அமைச்சர்களாக மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, அமைச்சரவை அமைச்சர்கள், மத்திய வங்கியின் நிதிச் சபை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் இருவர், திறைசேரியின் செயலாளர் S.R.ஆட்டிகல ஆகியோரால் அனுப்பப்பட்ட கடிதங்கள், பரிந்துரைகள் அனைத்தையும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கு இன்று உத்தரவிட்டுள்ளது. 

மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு மத்திய வங்கியினால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கைகளையும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுத்தருமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களையும் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, L.T.B. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் அடிப்படை உரிமை மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய மற்றும் விஷ்வக பீரிஸ் ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

மத்திய வங்கியின் நிதிச்சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியதுடன், மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன மற்றும் நவீன் மாரபன ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரில் புள்ளே தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியது.