நம்பிக்கை சீர்குலைவே ஐ.நா பிரேரணைக்கு காரணம்

கொள்கை மாற்றமும் தலைவர்கள் மீதான நம்பிக்கை சீர்குலைவுமே ஐ.நா பிரேரணைக்கு காரணம்: விஜயதாச ராஜபக்ஸ

by Bella Dalima 07-10-2022 | 3:47 PM

Colombo (News 1st) நாடு என்ற ரீதியில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட கொள்கை மாற்றம் மற்றும் தலைவர்கள் மீதான நம்பிக்கை சீர்குலைவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான பிரேரணை நிறைவேற்றப்பட்டதற்கான முக்கிய காரணம் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். 

ஐ.நா பிரேரணை தொடர்பாக எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் வினவியபோதே, அவர் இதனை தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நாட்டில் ஜனநாயக சீர்திருத்தங்களை விரைவில் ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் இதன்போது கூறினார்.

நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக நாடு பாரதூரமான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டிற்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் GSP+ சலுகையும் பாதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டார். 

இலங்கை தன்னிறைவை அடைந்த நாடாக இருந்தால், இந்த விடயம் தொடர்பில் கரிசனை கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. எனினும், இலங்கையிலிருந்து 70 வீதமான பொருட்கள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன்,  GSP+ நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார். 

எவ்வாறாயினும், நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதாக சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைத்தாலும், நாட்டில் காணப்படும் சந்தர்ப்பவாத அரசியலினால், சர்வதேச நாடுகளால் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் மேலும் தாமதமடையக்கூடும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.