மைத்திரிபாலவின் மனு தொடர்பில் விரைவில் பரிசீலனை

மைத்திரிபால சிறிசேனவின் எழுத்தாணை மனு தொடர்பில் ஒக்டோபர் 10 ஆம் திகதி பரிசீலனை

by Bella Dalima 06-10-2022 | 5:44 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் 30 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை எதிர்வரும் 10 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக தம்மை பெயரிட்டு, கோட்டை நீதவான் பிறப்பித்த அறிவித்தல் செயற்படுத்தப்படுவதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவரும், அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோவும் தாக்கல் செய்த தனிப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த கோட்டை நீதவான் திலின கமகே, எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு தமக்கு அறிவித்தல் பிறப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்ற போதிலும், அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி வகித்த தாம், கடமை தவறியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கில் சந்தேகநபராக பெயரிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளமை நியாயமற்றது என மனுவில் சுட்டிக்காட்டப்படுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக கோட்டை நீதவான் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் எழுத்தாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.