இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மற்றுமொரு பிரேரணை சமர்ப்பிப்பு

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மற்றுமொரு பிரேரணை சமர்ப்பிப்பு

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மற்றுமொரு பிரேரணை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2022 | 4:52 pm

Colombo (News 1st) இலங்கை தொடர்பிலான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வட அயர்லாந்து, வடக்கு மெசடோனியா, ஜெர்மனி, மலாவி, மாண்டினீக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள் முன்வைத்துள்ள இந்த பிரேரணை ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 19 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதிலுள்ள முதல் இரண்டு விடயங்களில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேரணையிலுள்ள 19 விடயங்களில் 9 விடயங்கள் பொருளாதார நெருக்கடி, அண்மைக்காலமாக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குறிப்பிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்பு சீர்குலைந்தமை, பாரிய எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு, குடும்பங்களின் வருமானம் குறைந்தமை ஆகிய விடயங்கள் தொடர்பாக பிரேரணையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் மனித உரிமைகளுக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறவழி போராட்டங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள், அந்த போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டமை, அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிரான  வன்முறைகளின் போது ஏற்பட்ட மரணங்கள், காயமேற்படுத்தப்பட்டமை ,சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக உடனடியாக ஆராய்ந்து, அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தற்போதைய மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் தொடர்பில் தேவையான சுயாதீன, பக்கசார்பற்ற விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்பு செய்கின்ற சிவில் செயற்பாட்டாளர்களை பின் தொடர்வதை நிறுத்தி, அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறும் பிரேரணையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்