ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலும் 500 மில்லியன் டொலர் – ஜனாதிபதி

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலும் 500 மில்லியன் டொலர் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2022 | 1:51 pm

Colombo (News 1st) இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் கடன் வழங்கும் நாடுகளுடனான மாநாட்டில் இணை தலைமைத்துவத்தை ஏற்பதற்கும் ஜப்பான் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று(06) விசேட உரையாற்றய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

இதனிடையே, இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு உட்பட்ட நாடுகளின் நிதி அமைச்சர்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பொருளதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்த கலந்துரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை ஆகியன தற்போது வழமையான நிலையில் இல்லை என தெரிவித்த ஜனாதிபதி, சில அரசியல் கட்சிகளும் பிரிவுகளும் நாடு வழமையான நிலையில் உள்ளதாக கருதி செயற்படுவதாக கூறினார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள்  தொடர்பாக தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுவான இணக்கப்பாட்டிற்கு வர வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தமது விசேட உரையில் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளிடம் கடனை பெற்று பொருளாதார நிலையை வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த உடன்படிக்கை இரு தரப்பு வர்த்தக செயற்பாட்டினை மேம்படுத்துவதற்கு உதவும் என சிங்கப்பூர் பிரதமர் நம்பிக்கை வௌியிட்டதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பான் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் இரு தரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடன் மறுசீரமைப்பு மாநாட்டில் இணை தலைமைத்துவத்தை ஏற்பதற்கு ஜப்பான் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஜப்பானுடனான நீண்டகால நட்புறவை மீளக் கட்டியெழுப்ப முயற்சிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி சீனாவுடனும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்..

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜப்பானில் சந்தித்தபோது தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக புதுடில்லிக்கு வரவுள்ளதாக அவரிடம் கூறியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் அதிகளவிலான அரச தலைவர்கள் மற்றும் பிரதிதிநிதிகளை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தமை சிறப்பானது எனவும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பாக அவர்களுடன் கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் நாட்டிற்கு ஒத்துழைப்பை வழங்க அவர்களில் அநேகமானவர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட கடன் வழங்கும் நாடுகளுடன் விரைவில் பொது இணக்கப்பாட்டிற்கு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தமது விசேட உரையில் தெரிவித்தார்.

500 மில்லியன் டொலர் கடன் உதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நிவாரணக் கடனை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக அந்நிய செலாவணி இருப்பை அதிகரித்துக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அடுத்த வருட இறுதியாகும் போது ஓரளவு ஸ்திரநிலையை ஏற்படுத்திக் கொண்டு ரூபாவின் பெறுமதியை நிலையாக பேண முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வௌியிட்டார்.

கடந்த காலங்களில் அதிகளவில் பணம் அச்சிடப்பட்டமை காரணமாக பண வீக்கம் 100 வீதத்தால் அதிகரித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்கள் அடைந்துள்ள நஷ்டம் வருட இறுதியாகும்போது 4,000 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி இந்த நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாக கூறினார்.

பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அடுத்த பெரும்போகத்தில் தடையின்றி விவசாய செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான உரம் மற்றும் விதை நெல்லை அரசாங்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

நாட்டின் சில தரப்பினர் உணவை பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் அவர்களை கண்டறிந்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் வரிக் கொள்கை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

நாட்டின் அனைவரும் மறைமுகமாக பல வரிகளை செலுத்தி வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்