முல்லைத்தீவில் சுருக்கு வலையால் சிக்கல்: மீனவர்களின் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

முல்லைத்தீவில் சுருக்கு வலையால் சிக்கல்: மீனவர்களின் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2022 | 7:27 pm

Colombo (News 1st) முல்லைத்தீவில் இரு மீனவர் தரப்பினருக்கிடையே ஏற்படவிருந்த முரண்பாட்டினை தடுப்பதற்காக பொலிஸார் இன்று கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

சுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யுமாறு ஒரு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சுருக்கு வலைக்கு அனுமதி வழங்குமாறு கோரி மற்றுமொரு தரப்பினர் பேரணியை முன்னெடுத்த போதே  கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

சுருக்கு வலையை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரி முல்லைத்தீவு பிரதான பஸ் தரப்பிடத்திற்கு அருகிலிருந்து  கடற்றொழில் திணைக்களத்தை நோக்கி மீனவர்கள் பேரணியாக சென்ற போது, கடற்கரை வீதியில் பொலிஸாரால் தடை ஏற்படுத்தப்பட்டது.

எனினும், மீனவர்கள் வீதித் தடைகளையும் மீறி செல்ல முயற்சித்த போது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். 

இதன்போது, மயக்கமுற்ற மீனவர் ஒருவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக  நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

கண்ணீர்ப்புகை பிரயோகத்தின் பின்னர், எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்த மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுருக்கு வலை மீன்பிடியைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குமாறும், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் தங்களுக்கான எரிபொருளை வழங்குமாறும் கோரி மீனவர்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை  சந்தித்து மீனவர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

கடற்றொழில் அமைச்சர் குழு ஒன்றை அனுப்பி, அவர்கள் மூலம் முறைப்பாடுகளை ஆராய்ந்து, தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் குறிப்பிட்டார். 

இதனிடையே, சுருக்கு வலை தொழிலுக்கு அனுமதி கோரும் சில மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சென்று இன்று பிற்பகல் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இதேவேளை, தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை முற்றாக நிறுத்துமாறும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்குமாறும் வலியுறுத்தி, முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்திற்கு முன்பாக மற்றுமொரு மீனவர் தரப்பினால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக  இன்றும் தொடர்கிறது.

கவனயீர்ப்பில் ஈடுபட்ட சில மீனவர்கள், சில சமயத் தலைவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள பணிப்பாளர் எஸ்.கலிஸ்டன் ஆகியோர் இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் தமக்கு சாதகமாக அமையவில்லை என தெரிவித்த மீனவர்கள்,  முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களின் படகுகளுக்கு தீ வைத்து எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு படகுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்